ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, தன்னிச்சையாக கைது செய்வதற்கு பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் பயன்படுத்தப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு அவசரகால சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய தேவையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, அமைதியான செயற்பாட்டாளர்களை சட்டவிரோதமான முறையில் அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மினாக்ஷி கங்குலி அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாடுகள், மக்களின் உரிமைகளை மதிக்கும் நிர்வாகத்துடன் மாத்திரமே செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் பின்பற்றும் அடக்குமுறை கொள்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, சட்டவாட்சியை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மினாக்ஷி கங்குலி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.