தமிழகம் முழுதும், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஹிந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
வரும் 31ம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு வாயிலாக தயாரிக்கப்பட்ட சிலை பாகங்கள், திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் கொடுவாய் அருகே எடுத்து வரப்பட்டு, அவற்றைப் பொருத்தும் பணி நடக்கிறது.
ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப சிலைகள் தயாராக உள்ளன.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: கோவையில் 6,000, திருப்பூரில் 5,000 உட்பட, தமிழகம் முழுதும், 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
வரும் 31 முதல், செப்., 4ம் திகதி, வரை சதுர்த்தி விழா கொண்டாட உள்ளோம். செப்., 3ம் திகதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர்.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ‘பிரிவினை வாதத்தை முறியடிப்போம்; தேசிய சிந்தனையை வளர்ப்போம்’ என்ற கோஷத்துடன் கொண்டாடப்பட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.