பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் வால்மீகி கோவில் உள்ளது. இது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலை ஆக்கிரமித்திருந்த கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
இந்த கோவிலை கிறிஸ்தவ குடும்பம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்தது. அவர்கள் ஹிந்து மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறி அந்த சொத்தை அனுபவித்து வந்தனர். கோவில் வழிபாடு நடத்த யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பராமரிப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் உடைய சொத்து அறக்கட்டளை வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். கோவிலை ஆக்கிரமித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் வால்மீகி கோவில் சொத்து அறக்கட்டளை வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஹிந்துக்கள் வழிபாடு செய்ய அந்த கோவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவிலை விரைவில் புணரமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.