குரங்கு அம்மை உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது.
இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன.
நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அவசர நிலையை பிரகடனம் செய்தது.
இந்தநிலையில் குரங்கு அம்மை நோயை அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது.