இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 18-ந்திகதி ஹராரேவில் நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஷிகர் தவான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டன் கிரேக் எர்வின் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
அவருக்கு பதில் கேப்டனாக ரெஜிஸ் சகாப்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம் வருமாறு:- ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), சிக்கந்தர் ராசா, இன்னசென்ட் கையா, கைடானோ, வெஸ்சி மாதேவெரே, ரியான் பர்ல், தனகா ஷிவாண்டா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, கிளைவ் மாடண்டே, ஜான் மசோரா, முன்யோங்கா, ரிச்சர்ட் நகர்வா, ரிக்டர் நகராவா, நியுச்சி, மில்டன் ஷூம்பா, டிரிபாகோ. காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா இடம்பெறவில்லை.
சமீபத்தில் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை 2-1 என்று ஜிம்பாப்வே கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது