“கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம்” கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. அதேபோல, “ப்ரீக்ளாம்ப்சியா” என்பது இரத்த அழுத்தத்தின் திடீர் அதிகரிப்பை குறிக்கும் பாதிப்பாகும். இது உடல் உறுப்புகளை பாதிக்கும் மற்றும் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தானது. கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் மற்றும் “ப்ரீக்ளாம்ப்சியா” ஆகிய இரண்டு நிலைகளும் பெரும்பாலும் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு கண்டறியப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களை அனுபவித்த பெண்களுக்கு எதிர்காலத்தில் இருதய நோய் வருவதற்கான ஆபத்து 63 சதவீதம் அதிகரித்துள்ளது என புதிய ஆராய்ச்சியின் படி கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் இருதய பிரிவு கல்லூரி (காலேஜ் ஆப் கார்டியாலஜி) இதழில் புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, வகை 2 நீரிழிவு, அல்லது கர்ப்பத்திற்குப் பிறகு அதிக எடை அல்லது பருமனாக இருப்பது எதிர்காலத்தில் இருதய நோய்களை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வில் தகவல் இந்த நிலையில், இந்த மருத்துவ ஆய்வு அறிக்கை முடிவுகள் மூலம் தனி நபர்கள் தங்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும் மருத்துவ பணியாளர்கள், கர்ப்பிணி பெண்களுடைய கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை முறையாக கண்காணிக்க இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் பிரசவம் முடிந்த பின் வேறு மருத்துவர்களை அணுகி பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. செவிலியர்களின் மருத்துவர் ஆய்வு 2ம் பாகம் மூலம், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழங்கிய மருத்துவ தகவலை வைத்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வானது “கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம்” பிரச்சினை உள்ள பெண்களுக்கு எதிர்காலத்தில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை கண்காணிக்க நடத்தப்பட்டது. இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகள் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் ஆகிய நான்கு பகுதிகளில் முன்கூட்டியே கண்காணிப்பு செய்வது, இந்த பெண்களிடையே எதிர்காலத்தில் இருதய பாதிப்புகளை தாமதப்படுத்த அல்லது தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு வெளிக்காட்டுகிறது.
இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 10% பெண்கள் தங்கள் முதல் கர்ப்பத்தின் போது உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த பெண்களில், 3,834 (6.4%) பேர் ப்ரீக்ளாம்ப்சியாவையும், 1,789 (3%) பேர் கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளனர். கர்ப்பத்திற்கு முன் பருமனாக இருந்த பெண்கள், கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. (ஆய்வில் பெண்களின் சராசரி வயது 61 வயதாக எடுத்துக்கொண்டால்) ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 30 வயதுக்குப் பிறகு, தோராயமாக 1,074 (1.8%) பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இருதய பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது.
நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் அனைத்திலும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. இது பெண்களிடையே கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தையும் இருதய நோய் அபாயங்களை 81% அதிகரிக்க காரணம் ஆகும். மேலும், கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்தை எதிர்கொண்ட பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இருதய நோய்க்கு சிகிச்சையளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆய்வு பெண்களுக்கும் மருத்துவர்களுக்கும் வலுப்படுத்துகிறது. தேசிய புற்றுநோய் நிறுவனம் மற்றும் யூனிஸ் கென்னடி ஸ்ரீவர் தேசிய குழந்தைகள் சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலும் வெள்ளையின பெண்கள் மட்டுமே பங்கேற்றதால் ஒவ்வொரு பெண்களை பொறுத்தும் பாதிப்பு மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.