”தமிழகத்தில் 37.81 லட்சம் வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளனர்” என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் முதல் திகதி துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர்.
இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஆதார் எண் வழங்க முடியாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர ‘Voter Help Line’ எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம்.
இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: தமிழகம் முழுதும் இதுவரை 37 லட்சத்து 81 ஆயிரத்து 498 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 6.08 சதவீத அளவு.இவர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டுச்சாவடி அலுவலர் வழியாக பதிவு செய்துள்ளனர். மீதம் 10 சதவீதம் பேர் ஆன்லைன் மற்றும் செயலி வழியாக பதிவு செய்துள்ளனர்.