இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் தமது நாட்டுப் பிரஜைகள் வரக்கூடாது என பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு எதிர்வரும 15ம் திகதி நீக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து, இந்தியாவில், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்த அவுஸ்திரேலிய குடிமக்கள், சொந்த நாடு திரும்புவதற்கு தற்காலிக தடை விதித்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.’உத்தரவை மீறி நாடு திரும்ப முயற்சிக்கும் நபர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவிட்டார்.
இதற்கு, அந்த நாட்டு எம்.பி.,க்கள், டாக்டர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.’இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள சொந்த நாட்டு மக்களை, அரசு கை விடக்கூடாது’ எனக் கருத்து தெரிவித்தனர்.இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவின் பெங்களூரில் கடந்த ஓராண்டாக சிக்கியுள்ள அவுஸ்திரேலிய குடிமகன் ஒருவர், சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது.இதில், அவுஸ்திரேலிய மக்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட தடையை, வரும், 15ம் தேதி முதல் விலக்கிக்கொள்ள, பிரதமர் ஸ்காட் மோரிசன் சம்மதித்தார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலிய குடிமக்களை அழைத்துச் செல்லும் முதல் விமானம், வரும், 15ல், இந்தியாவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.