கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்காக ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தனர் .இந்த மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குகிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் ஐஐடி மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிப்பதில்லை.
அதற்கு மாறாக பணிமனையில் உள்ள கழிவறைகளை கழுவச் சொல்லுவதும், கழிவறை சுவற்றில் பெயிண்ட் அடிக்க சொல்வதுமான பணிகளை செய்ய அதிகாரிகள் கட்டளை இடுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே முறையான தொழில் பயிற்சிகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படுகிறதா என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அரசு பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்