இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ரவிந்தர் பால் சிங் கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 65. இந்திய அணிக்காக 1979 முதல் 1984 வரை விளையாடியவர் ரவிந்தர் பால் சிங். 1980, 1984 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் விளையாடினார். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. இந்திய அணிக்காக ஜூனியர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, வெள்ளிவிழா 10 நாடுகள் கோப்பை, உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை எனப் பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
காயம் காரணமாக 1984 ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ரவிந்தர் பால் சிங். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் ரவிந்தர் பால் சிங். பிறகு கரோனாவிலிருந்து மீண்ட ரவிந்தர், லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். எனினும் திடீரென அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
ரவிந்தர் பால் சிங்கின் மறைவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார்.