பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், வெள்ள பாதிப்புக்கு 2.87 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 6.62 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்து உள்ளன என தெரிவித்து உள்ளது. இதனால், மொத்தம் 9.49 லட்சம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்து போன நிலையிலோ காணப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு பாகிஸ்தானில் 3,451.5 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்து உள்ளன. 149 பாலங்கள் இடிந்து போயுள்ளன. 170 கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன 7.19 லட்சம் கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
சாலைகளும் மற்றும் பாலங்களும் சேதமடைந்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவசர தேவைக்கான சுகாதார நலன், காய்கறி சந்தைகள் அல்லது பிற முக்கிய சேவைகளை தேடி செல்வதற்கும், உதவி தேவையான நபர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கான வசதிகளும் கட்டுப்பட்டுத்தப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.
வெள்ள பாதிப்புகளால் உருக்குலைந்து போன நிலையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நன்கொடைகளை அளிக்கும்படி ஆளும் அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. வெள்ள பாதிப்புகளை முன்னிட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி ஆலோசிப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றையும் இன்று நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார்.
இதன்படி அனைத்து மாகாண முதல்-மந்திரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு உள்ளது என அந்நாட்டுக்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மரியும் அவுரங்கசீப் தெரிவித்து உள்ளார். இக்கூட்டத்தில் ஆயுத படைகளின் தலைமையும் கலந்து கொள்ளும் என கூறப்படுகிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.