வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரியா, ஜப்பான், குவைத், டுபாய், அபுதாபி மற்றும் பல நாடுகளில் ஹவாலா முறையின் கீழ் இலங்கையர்கள் ஈட்டும் அந்நியச் செலாவணியைத் தக்கவைக்க போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கொண்ட திட்டம் வெளிவந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர்களை போதை பொருள் கடத்தல்காரர்கள் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக இலங்கையர்களின் வீடுகளுக்கு ரூபாயில் பணத்தை வழங்கவே திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, வெளிநாடுகளில் இலங்கை பணியாளர்கள் இருக்கும் நாடுகளில் இருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.