15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த பிரிவில் இருந்து சூப்பர்4 சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கை- வங்காளதேச அணிகள் துபாயில் இன்று (வியாழக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆச்சரியமளிக்கும் வகையில் இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தன.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 127 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஸ்கோரை ஆப்கானிஸ்தான் 9 பந்து மீதம் வைத்து எட்டிவிட்டது.
இவ்விரு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களையே அதிகமாக நம்பி இருக்கின்றன. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் உதவிகரமாக இருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.