கொலம்பியா நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல், பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹுய்லா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 8 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டின் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அந்நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.