சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று காலை 8.15 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் வெங்கடேசன், ராஜபூபதி தலைமையில் சுமார் 20 போலீசார் சென்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள், பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்தனர். அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. போட்டோவும் எடுக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் சில அறைகளில் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்று கேட்டறிந்து குறித்து கொண்டனர். சில அறைகளில் அ.தி.மு.க. அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், அறிக்கைகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் மாயமாகிவிட்டதை சோதனையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.