பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண் நீதிபதியை மிரட்டியதாக இஸ்லாமாபாத் சதார் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் மார்கல்லா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், இம்ரான்கான் தற்போது செப்டம்பர் 12 வரை ஜாமீனில் உள்ளார். பெண் நீதிபதி மற்றும் இஸ்லாமாபாத் போலீஸ் உயர் அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இம்ரான்கான் பெண் நீதிபதிக்கு எதிரான தனது ஆத்திரமூட்டும் கருத்துக்களுக்கு “ஆழ்ந்த வருத்தம்” தெரிவித்தார், ஆனால் மீண்டும் அவரது உணர்வுகளை (பெண் நீதிபதி) புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும், அவரது உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருந்தால், மிகவும் வருந்துவதாகவும் கூறினார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நேற்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் ஆஜரானார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோர்ட்டுக்கு வெளியே ஏன் அதிக அளவு காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் ஏன் நிறுத்தியுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.தனக்கு எதிராக தொடரப்பட்ட பயங்கரவாத வழக்கு விசாரணையில் தான் சிறையில் அடைக்கப்பட்டால் , தான் மேலும் ஆபத்தானவராக மாறுவேன் என்றும் எச்சரித்தார்.
நாடு நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) அறிக்கை அதைக் காட்டுகிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஸ்திரமின்மைக்கு ஒரே தீர்வு புதிய தேர்தல்கள் தான் என கூறினார்.