பேரணாம்பட்டு அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அமைக்கும் பணி நிறுத்தம் பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி ஊராட்சியை சேர்ந்தது நலங்காநல்லூர் கிராமம். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமெனில் கொல்லாபுரம் கிராமத்திலிருந்து சுமார் 1½ கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். சாலை அமைப்பதற்காக நலங்காநல்லூர் கிராம மக்கள் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவரிடமிருந்து பணம் கொடுத்து இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நலங்காநல்லூர் கிராமத்திற்கு பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் தார்சாலை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பூபதியின் மகன்கள் தங்கள் நிலத்தின் வழியாக சாலை அமைக்கக் கூடாது என குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பூபதியின் மகன்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனால் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட முடியாமல் போனது.
மழை காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி நலங்காநல்லூர் கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மெரசப்பல்லி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு சென்ற பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த அமலுவிஜயன் எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தன் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் தற்காலிகமாக சாலையில் மண்ணை நிரப்பி சீரமைக்கப்படும் என கூறி சமரசம் செய்தனர்.
இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பேரணாம்பட்டு- குடியாத்தம் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.