அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 8-ந் திகதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும், 36 கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தருணத்தில் ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனமும், பொது விவகாரங்கள் ஆராய்ச்சி நார்க் மையமும் இணைந்து அங்கு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது அம்பலமாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் அவரது செல்வாக்கு 36 சதவீதமாக இருந்தது, தற்போது 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2 மாதங்களில் இந்த ஏற்றம் வந்திருக்கிறது. அதுவும் தேர்தலுக்கு 2 மாதங்கள்கூட இல்லாத நிலையில் வந்திருப்பது ஆளும் ஜனநாயக கட்சியினருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
கோடை காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டு, குடியரசு கட்சிக்கு எதிராக ஆளும் ஜனநாயக கட்சி இழப்புகளை சந்திக்கும் நிலை வந்தது.
ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதியின் விருப்பத்தின் பெயரில் சில சட்டங்களை இயற்றி, ஆளும் கட்சி வெற்றி கண்டிருப்பது அவரது செல்வாக்கு அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பெரியவர்களில் 53 சதவீதத்தினர் ஜோ பைடனை ஏற்கவில்லை, நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாகவே இருக்கிறது என்பதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.