Home இந்தியா தமிழகத்தில் தி.மு.க.,வின் கிளை அமைப்பு

தமிழகத்தில் தி.மு.க.,வின் கிளை அமைப்பு

by Jey

நுாற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் தி.மு.க.,வின் கிளை அமைப்பு போல செயல்படுவதாக, அக்கட்சி தொண்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 1925-ல் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் மூன்று ஆண்டுகளில் நுாற்றாண்டை கொண்டாட இருக்கிறது. 1951 முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த, இந்திய கம்யூனிஸ்ட், இப்போது வலுவிழந்துள்ளது. தி.மு.க., – அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து, சில எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2019 லோக்சபா தேர்தல் முதல், தி.மு.க., கூட்டணியில் உள்ளது.

லோக்சபாவில் அக்கட்சிக்கு உள்ள இரண்டு எம்.பி.,க்களும், தமிழகத்தை சேர்ந்தவர்கள்; தி.மு.க., தயவால் வென்றவர்கள்.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்வேளூர், தளி ஆகிய இரு இடங்களில் மட்டுமே வென்றது. 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த கட்சியின் கிளை அமைப்பாகவே, இந்திய கம்யூனிஸ்ட் மாறி விட்டதாக, அக்கட்சி தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், மின் கட்டண உயர்வு, பத்திரிகையாளர் கைது போன்ற விவகாரங்களில், தி.மு.க., அரசை சற்று காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு, ‘வெறும் வாயில் மென்று கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி அவல் கொடுப்பதா?’ என, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் விமர்சித்தது.

ஆனால், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, நெல் கொள்முதல் பிரச்னை உள்ளிட்ட அனைத்திலும், தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட கூட, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் முன்வருவதில்லை என, அக்கட்சி தொண்டர்களே கூறுகின்றனர்.

 

மின் கட்டண உயர்வு போன்ற பிரச்னைகளில் கூட, ‘சரியல்ல, திரும்ப பெற வேண்டும்’ என்பது போன்ற வலிக்காத மாதிரியான வார்த்தைகளை தேர்வு செய்து, அறிக்கை விடுவதாகவும், முத்தரசன் மீது குற்றம் சாட்டுகின்றனர்.அகில இந்திய மாநாட்டை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘அரசியல் சித்தாந்த பணிகளை தீவிரப்படுத்தி, போர்க்குணம் மிக்க இயக்கங்களை நடத்த வேண்டும்’ என, முத்தரசன் கூறியுள்ளார். ஆனால், செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக உள்ளது என்கின்றனர்.

தா.பாண்டியன் பொறுப்பில் இருந்தவரை, ஜெயலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். தா.பாண்டியனால் மாநில செயலராக்கப்பட்ட முத்தரசன், அவரது வழியில் இன்று, தி.மு.க., தீவிர விசுவாசியாக செயல்படுகிறார். இதனால், தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும், தங்களது முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லாமல் போவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

related posts