கடந்த வாரம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக கவுதம் அதானி இருந்து வந்தார். இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அதானி 135 பில்லியன் டாலர் (ரூ. 10.98 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெப் பெசோஸ் 138 பில்லியன் டாலர் (ரூ. 11.23 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதே நேரத்தில் 245 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் இந்த பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 82.4 பில்லியன் டாலர் (₹6.70 லட்சம் கோடி). சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் உள்ளார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலை பெற அதானி, பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோருக்கு இடையே சமீப நாட்களாக கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்தார். அதை தொடர்ந்து ஜூலையில், அதானி மைக்ரோசாப்டின் பில் கேட்ஸை விஞ்சி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார்.
அதை தொடர்ந்து அவர் ஆகஸ்ட் 30 அன்று, பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாவது பெரிய பணக்காரராக உருவெடுத்தார். பின்னர் அவர் கடந்த வாரம் முதல் முறையாக இந்த பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தார். கவுதம் அதானி கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.