பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற, சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அந்தப் பதவிக்கு சசிகலாவும், துணைப் பொதுச்செயலராக தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சசிகலா சிறை சென்றார். கடந்த, 2017 செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், பொதுச் செயலர் மற்றும் துணைப் பொதுச்செயலர் பதவிகளில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் நீக்கப்பட்டனர்.
புதிதாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தது.
சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முழுமையாக விசாரணை நடத்தாமல், தன் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமல், வழக்கை நிராகரித்ததால், சிவில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும்படி, மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது.
இம்மனு, நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணைக்காக, அக்டோபர் 26க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.