ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்து உள்ளார்.
இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த சூழலில், சனந்தஜ் மற்றும் சாக்கிஜ் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.