வேலூர் மாவட்டம், மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலூர் மாவட்டம், மேல்மொனவூரில் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் சிறிதும் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.
நம்பிக்கையோடு நம்மை நாடி வந்த நம் இரத்தச் சொந்தங்கள் என்ற உணர்வு அணுவளவுமின்றி, வாழ வழியற்று வந்த அகதிகள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையே, தரமற்ற வீடுகளைக் கட்ட அனுமதித்ததற்கு முக்கியக் காரணமாகும்.
ஆடு, மாடுகளை அடைக்கும் பட்டிகளைவிட மிக மோசமான முறையில் குடியிருப்புகள் கட்டப்படுவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் சிறிதும் மனச்சான்றற்ற கொடும்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.