சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி அன்று கல்லூரி மாணவி சத்யாவை (வயது 20) மின்சார ரெயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளனின் மகன் சதீஷ் (23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது காதலை ஏற்க மறுத்ததால் சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்ததாக போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். சத்யா கொலை செய்யப்பட்ட துக்கம் தாங்காமல் அவரது தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
ஒரே நேரத்தில் 2 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. தந்தை-மகள் 2 பேரின் உயிர்களும் பறிபோனது மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
எனவே கொடூர மனம் படைத்த சதீஷூக்கு கடுமையான தண்டனையை விரைவில் பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வசம் இருந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.