திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடைகளைக் களைந்து சோதனை செய்ததால் ஆத்திரமடைந்த நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்கள், நாவிதர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தேவஸ்தானம் கூறி வருகிறது.
ஆனாலும், பக்தர்கள் தாமாக முன்வந்து நாவிதர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதனை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேவஸ்தான ஊழியர்கள், இன்று காலை பணியில் இருந்த நாவிதர்களிடம் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்த பணம் மற்றும் அடையாள பட்டையையும் அவர்கள் பறித்துச் சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்து நாவிதர்களும் வளாகத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் மீண்டும் பணியை தொடங்கினர். இதனால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தலைமுடி காணிக்கை அளிக்க முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.