ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் வசித்து வரும் பெண் மிராண்டா டிக்சன் (வயது 48). தனது வீட்டின் முன்பக்க கதவுக்கு கடந்த ஆண்டு பிங்க் நிற பெயிண்டிங் அடித்து உள்ளார். 2 குழந்தைக்கு தாயான அவர், 2019-ம் ஆண்டு தனது பெற்றோரிடம் இருந்து அந்த வீட்டை வாங்கிய பின்பு 2 வருடங்களாக அதனை புதுப்பித்து உள்ளார்.
இதன்பின்பு, சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே அந்த கதவு பிரபலம் அடைந்தது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலரும், அந்த வழியே தெருவில் செல்லுமபோது, அவரது வீட்டின் முன் வந்து கதவின் முன்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து செல்லும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இதற்கு சோதனையாக அவருக்கு அரசிடம் இருந்து புதிய நெருக்கடி வந்து உள்ளது. இந்த பிங்க் நிறத்திற்கு எடின்பர்க் நகராட்சி கவுன்சில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதனை வெள்ளை நிறத்திற்கு மாற்றும்படி வலியுறுத்தி உள்ளனர்.
அப்படி இல்லையென்றால் 20 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.19 லட்சம்) அபராதம் கட்ட நேரிடும் என்று டிக்சனுக்கு நகராட்சி கவுன்சில் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. அதற்கு டிக்சன், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல், நாட்டிங் ஹில் மற்றும் ஹர்ரோகேட் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் பளிச்சென்ற நிறத்தில் பெயிண்டிங் அடிக்கப்பட்டு காணப்படுகின்றன.
நான் எனது வீட்டுக்கு வரும்போது, என்னுடைய முன்பக்க கதவை பார்க்கும்போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக நான் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்த கதவு விவகாரத்தில் வந்த புகாரானது முற்றிலும் தீய நோக்கம் கொண்டது.
இது மிக சிறிய விசயம் என்றும் டிக்சன் கூறியுள்ளார் என இண்டிபென்டெண்ட் பத்திரிகை தெரிவித்து உள்ளது. எனினும், எடின்பர்க் நகராட்சி கவுன்சில் விதிகளின்படி, வீட்டின் முன்பக்க கதவுகள் மங்கலான நிறத்திலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து, அடர் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க டிக்சன் திட்டமிட்டு வருகிறார் என கூறப்படுகிறது.