எம்.பி.,க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கண்காணித்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் பல, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் மற்றும் அவற்றை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு பெஞ்ச் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.