தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரை பயன்படுத்தி மட்டக்களப்பில் மாவீரர் தினத்தை குழப்பும் வகையில் அரசாங்கம் கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்கட்டிச்சோலை, வாகரை பகுதிகளில் மாவீரர் தினம் இன்று 27ஆம் திகதி நடைபெறாது நாளை 28ஆம் திகதி நடைபெறும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை வன்மையாக கண்டிக்கின்றேன்.
தமிழர்களின் விடுதலைக்காக,தமிழர்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக, தமிழர்களின் தேசியம், உரிமை, சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பட்ட அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வுக்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த எங்களுடைய உறவுகளை மாவீரர்களை நினைவுகூருகின்ற புனிதமான நாள்.
வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து துயிலும் இல்லங்களும் இன்றைய நாளில் எழுச்சிகோலம்பூண்டுள்ளதுடன் இன்று மாலை 6.05மணிக்கு மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் கூடி மாவீரர்க்கு விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்துகின்ற புனிதமான நிகழ்வு நடைபெறவுள்ளது.
சில துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதன் காரணத்தினால் அங்கே சென்று அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலைமையிலே அந்த துயிலும் இல்லங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடிய பகுதிகள் தயார்படுத்தப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதற்குரிய ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய பொது அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டிருக்கின்றார்கள்.