ரஷியா – உக்ரைன் போருக்கு பிறகு, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் சில நாடுகள் ஏற்கனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன.
ரஷியா நஷ்டத்தினை தவிர்க்கும் வகையில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக அறிவித்தது. இதன் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.
இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவது போல பாகிஸ்தானுக்கும் சலுகை விலையில் கொடுக்க வேண்டும் என அந்நாடு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் 3 நாள் பயணமாக மாஸ்கோ சென்றனர்.
கடந்த நவம்பர் 29-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள், கட்டணம் செலுத்தும் முறை மற்றும் ஏற்றுமதி செலவு பற்றி விவாதித்திருந்தனர்.
பாகிஸ்தான் பெட்ரோலிய துறை மந்திரி முசாதிக் மாலிக், நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையின் போது தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 30-40 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது விரைவில் வாங்குவோம் என்றும் பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.