72 வயதான ஹபீஸ் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் பாகிஸ்தானில் லாகூரில் உள்ள உயர் பாதுகாப்பு கோட் லக்பத் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஐந்து பயங்கரவாத குழுவிற்கு நிதியுதவி வழங்கிய வழக்குகளில் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதி என அறிவிக்கபட்ட சயீத்துக்கு அமெரிக்கா 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை அறிவித்து உள்ளது.
6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேரைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா சயீத் தலைமையிலான ஜமாத்-உத்-தவா அமைப்பின் முன்னோடி அமைப்பாகும்.
பாகிஸ்தான் பஞ்சாப் ஜோஹர் டவுனில் ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீத்தின் வீடு உள்ளது. இந்த வீடு அருகே ஜூன் 2021 இல் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் சயீத் வீட்டில் இருந்ததாக வதந்தி பரவியது.
இந்த நிலையில் பஞ்சாப் பயங்கரவாத எதிர்ப்புத் துறை கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இம்ரான் மெஹ்மூத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- ஜூன் 2021 தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தை உலகத்தின் முன் எழுப்புவோம். இதில் இந்தியா நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானுக்கு (டிடிபி) இந்தியா ஆதரவளித்து வருகிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வெவ்வேறு வழிகளில் பரப்புவதற்கு இந்தியா மூலம் ஒரு மில்லியன் டாலர் பயங்கரவாத நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது என்பதையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என கூறினார்.