Home இலங்கை உள்நாட்டுக்குள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சி தோல்வி

உள்நாட்டுக்குள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சி தோல்வி

by Jey

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றார். இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாமென்பது, தமிழர் பக்கத்திலுள்ள கேள்வி. வழமைபோல் பல பதில்கள் கூறப்படுகின்றன. சமஸ்டியை அடிப்படையாகக் கொண்டு பேச வேண்டுமென்பது ஒரு பதில்.

சமஸ்டியை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் பேசவே கூடாதென்பது இன்னொரு பதில். மூன்றாம் தரப்பொன்றின் மேற்பார்வையில் தான் பேசவேண்டுமென்பது இன்னொரு பதில். சமஸ்டியை முன்வைப்பது பிரச்சினையில்லை ஆனால் இன்றைய சூழலில் கையாளக்கூடிய விடயங்களை கையாளும் வகையில்தான் பேச வேண்டுமென்பது இன்னொரு பதில்.

இவற்றுள் எது சரியான பதில்? எது சரி அல்லது பிழையென்னும் கேள்விக்கு பதிலை தேடுவதற்கு முன்பதாக, தமிழரின் இன்றைய நிலைமையை நோக்குவோம்.

எந்தவொரு இறுதி தீர்மானத்திற்கும் வருவதற்கு முன்னரும் நமது பலம் மற்றும் பலவீனங்களை, நமக்கு முன்னாலுள்ள சவால்களை, அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்புக்களை துல்லியமாக ஆராய்ந்துகொள்வது அவசியம். முதலில் ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்வோம்.

அதாவது, நமது இதுவரையான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. உள்நாட்டுக்குள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன.

வெளிநாடுகளின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. இந்தத் தோல்விகளிலிருந்து நாம் எதனை கற்றுக் கொண்டிருக்கின்றோம்? இந்தத் தோல்விகள் இரண்டு விடயங்களை எமக்கு கற்றுத்தந்திருக்கின்றன.

சிலர், இந்த இடத்தில் ஓர் எதிர் கேள்வியையும் முன்வைக்கலாம். ஏன் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது? பதில் அவ்வாறான முயற்சிகள் அனைத்துமே தோல்வியடைந்திருக்கின்றன. இதற்கு பண்டா – செல்வா உடன்பாடு தொடக்கம் ரணில், மைத்திரி ஆட்சிக்காலம் வரையில் தெளிவான சான்றுகளாகும்.

இதனையும் தாண்டி, சிங்களவர்களும் தமிழர்களும் வெளியாரின் தலையீடின்றி, பேசுவதாயின், அந்தப் பேச்சுவார்த்தையில், சிங்கள ஆளும் வர்க்கத்தின் கருணையே முதன்மையாக இருக்கும்.

சிங்களவர்களது கருணையின் எல்லைதான், தமிழர்களுக்கான தீர்வாகும். ஏனெனில் அவர்களை நிர்பந்திப்பதற்கான எந்தவொரு பலமும் தமிழர்களிடம் இல்லை. அவர்களது கருணையை நம்பி ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியுமா?

ரணில், மைத்திரி ஆட்சிக்கால பேச்சுவார்த்தைகள் அவ்வாறானதொரு அணுகுமுறையில்தான் முன்னெடுக்கப்பட்டது. எவரதும் தலையீடில்லாமல், வெறுமனே ரணில் விக்ரமசிங்கவோடும் இன்னும் சிலரோடும் பேசிவிட்டால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாமென்று தான் சம்பந்தன் தரப்பு கருதியது. ஆனால் அது நடைபெறவில்லை.

அது நடைபெறாது என்பதை ஏற்கனவே இந்த கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். இந்த படிப்பினையிலிருந்து சிந்தித்தால் வெளியாரின் அழுத்தம் கட்டாயமானது.

இந்த இடத்தில் எழும் அடுத்த கேள்வி, அந்த வெளியார் யார்? வெளியாரின் தலையீட்டை ஏற்படுத்துவது எவ்வாறு? தமிழரின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் இரண்டு வகையான வெளித் தலையீடுகள் இதுவரையில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இரண்டு தலையீடுகளின் போதும் சிங்கள ஆளும் வர்க்கம் சில விடயங்களில் கீழிறங்கிவந்தது.

இந்த இரண்டு தலையீடுகளின் போதும் தமிழ் தேசிய அரசியல் ஆயுதபலத்துடனிருந்தது. சிங்களவர்களை நிர்பந்திக்கும் பலத்துடன் தமிழர்கள் இருந்தனர். ஆனால் இப்போதைய நிலைமை முற்றிலும் மாறானது. வெளியாரின் மேற்படி இரண்டு தலையீடுகளுக்குமிடையில் ஒரு அடிப்படையான வேறுபாடுமுண்டு.

related posts