காங்கிரஸ் பாதயாத்திரைக்காக ராஜஸ்தானுக்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தவுசா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:- அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும். விவாதத்துக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். ராணுவ மந்திரியோ, மத்திய வெளியுறவு மந்திரியோ பதில் அளிக்க தேவையில்லை.
எத்தனையோ முன்னாள் பிரதமர்கள் இதுபோன்ற விவாதத்துக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியோ விவாதத்துக்கு பயந்து ஓடுகிறார். அவர் தனது மவுனத்தை கலைத்துவிட்டு, நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும்.
சீனாவுக்கு நற்சான்றிதழ் பிரதமர் மோடி, ‘சீனா’ என்ற வார்த்தையையே உச்சரிக்க மறுக்கிறார். ”யாரும் நம் பக்கம் வரவில்லை.
யாரும் நமது பகுதியில் இருக்கவில்லை” என்று ஒருதடவை சொன்னார். அவர் அளித்த நற்சான்றிதழால் நமது பேரம் பேசும் குறைந்துவிட்டது. கடந்த 1988-ம் ஆண்டு, எல்லையில் நாம் வலிமையாக இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சீனாவுக்கு சென்றார். அதன்பிறகு இருதரப்பு உறவு இன்னும் வலுவடைந்தது.