அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது.
திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர்.
இந்த வெடிகுண்டு சூறாவளி என்பது கனமழை அல்லது கடும் பனியை தோற்றுவிக்க கூடியது. கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும். சில நீர்நிலைகளில் இதனால், பல அடி உயரத்திற்கு அலைகளும் எழுந்து காணப்பட்டன.
குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை பாதிக்கப்பட்டது.
டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். இதனால், அமெரிக்காவில் 20 கோடி பேருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் வீசி வருகிறது.