செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் பற்றிய அலுவல் ஆய்வு கூட்டம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்தறை அதிகாரிகளிடம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமப்புற சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு திட்டத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது, இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். தமிழகத்தில் காசநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொத்தம் 46,988 பேர் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் முதல் கட்டமாக 35,382 பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தி வருவதற்கு அதிகாரிகளையும், தமிழக சுகாதாரத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வங்கி கணக்கு தொடங்கும் திட்டமான பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் இதுவரை 77 லட்சம் பேர்
அவர்களில் 12 லட்சம் பேருக்கு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு விரைவில் கார்டுகள் வழங்கப்படும்.
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில், நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைப்பது போன்ற காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஜப்பான் நாட்டு வங்கியில் ரூ.1,900 கோடி கடன் எதிர்ப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக வரும் பட்ஜெட்டில் மத்திய அரசின் அனுமதி பெற்று ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்படும்.
சீனாவில் பரவிவரும் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகள், தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இந்த புதியவகை தொற்றினை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய குடும்ப நல குழும இயக்குனர் ஷில்பாபிரபாகர் சதீஷ், இந்திய ஓமியோபதி மருத்துவ இயக்குனர் கணேஷ், மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையர் கிளஸ்டன் புஷ்பராஜ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் டி.என்.ஹரிகரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.