சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரம் ஆடைத் தொழிலாளர்கள் அடுத்த வருடம் முதல் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் மையத்தின் அமைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
14 சுதந்திர வர்த்தக வலயங்களில் 148,000 ஆடைத் தொழிற்றுறை தொழிலாளர்கள் உள்ளனர், இங்குள்ள அதிக செலவு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. புதிய வரிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மேலும் பல தொழிற்சாலைகளும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மிகப் பெரிய நிறுவனம் ஒன்று கட்டுநாயக்க, கொக்கல மற்றும் பியகமவில் உள்ள தனது தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்தது. வேலை இழக்கும் அதன் 5,000 தொழிலாளர்களை இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளுக்கு வேலைக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு வெளியே உள்ள பல ஆடைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜனவரி முதல் மின் கட்டணம் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறுகிறார், மேலும் மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று ஊகங்கள் உள்ளன.
எனவே, நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் எங்கள் தொழிற்சாலைகளுக்கு புதிய ஓர்டர்களை வழங்கத் தயங்குகிறார்கள் மின்கட்டண உயர்வால் ஆடைத் தொழிற்சாலைகளின் செலவு அதிகரித்துள்ளது என்று அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார்.