இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயாரின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடையவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மோடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்ட ஹீராபென் மோடி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கையின் அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் செய்தியிலே இதனை தெரிவித்துள்ளார்.
தனது அன்பான தாயின் இழப்பினுடைய இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காலை காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று முற்பகல் நடந்தன. நரேந்திர மோடி, தாயாரின் சிதைக்கு தீ மூட்டினார்.
பீலே விதிவிலக்கான விளையாட்டு வீரர்
அதேவேளை கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் மறைவு குறித்து அறிந்து வருத்தமடைந்தேன். அவர் ஒரு விதிவிலக்கான விளையாட்டு வீரராக இருந்தார், அவர் இளைஞர்களையும் பெரியவர்களையும் கவர்ந்தார்.
பீலேவின் குடும்பத்தினருக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.