உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றிருந்த முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் (வயது 95), பதவி விலகிய பின்னர் வாடிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் வசித்து வந்தார். வயது மூப்பாலும், உடல்நலக்குறைவாலும் அவர் கடந்த ஆண்டின் கடைசி நாளில் (டிசம்பர் 31), மரணம் அடைந்தார்.
ஜோசப் அலாய்சியஸ் ராட்ஸிங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், கடந்த 600 ஆண்டுகளில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவர் ஆவார்.
20-ம் நூற்றாண்டின் மாபெரும் இறையியல் அறிஞராக கொண்டாடப்பட்ட அவரது மறைவு, உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கடந்த 2-ந்தேதி முதல் வைக்கப்பட்டது.
அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். அவரது உடல் 5-ந் தேதி அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் அடங்கிய பேழையை புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு இறுதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகமெங்கும் இருந்து கத்தோலிக்க பாதிரியார்கள், பேராயர்கள், கார்டினல்கள், கன்னியாஸ்திரிகள் என ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மூட்டு வலியால் அவதியுற்று வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து, இந்த இறுதி பிரார்த்தனையை நடத்தினார். பைபிளில் இருந்து புனித வாசகங்கள் ஜெர்மனி, இத்தாலி, அரபி, போர்ச்சுக்கீசு, பிரெஞ்ச் மொழிகளில் வாசிக்கப்பட்டன.
பதவியில் உள்ள போப் ஆண்டவர் ஒருவர், தனக்கு முந்தைய போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கை நடத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை. பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை மீது போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனித நீர் தெளித்தார். இறுதியாக போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல், அவருக்கு முந்தைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித பீட்டர் தேவாலயத்தின் அடியில் அமைந்துள்ள ‘வாடிகன் கிரோட்டஸ்’ என்று அழைக்கப்படுகிற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு மூன்றடுக்கு பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் உடல், அவர் முக்திப்பேறு அடைந்த பிறகு அங்கிருந்து அதே பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் செபாஸ்டியன் சிற்றாலயத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.