கடந்த மாதம் சீனா தனது பூஜ்ஜிய கொரோனா கொள்கையை கைவிட்டதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ அதிகாரி தெரிவித்தார். டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை சீனாவில் 59,938 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா இறப்புகளை குறைவாகப் பதிவு செய்ததற்காக சீனா உலகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சீனாவில் கொரோனா காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் சீன சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சீன அதிகாரிகளுடன் பேசினார், மேலும் நாட்டில் கொரோனா நிலைமை குறித்த புதிய தகவல்களை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதால், கொரோனா குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவைக் கேட்டுக் கொண்டுள்ளது