இங்கிலாந்து நாட்டில் லண்டன் பெருநகர காவல் துறையில் உயரதிகாரியாக பதவி வகித்தவர் டேவிட் கேர்ரிக். இவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனினும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நீண்டகால குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு என்ற இங்கிலாந்து மகளிர் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இது ஓர் அமைப்பின் மீதுள்ள நெருக்கடி. அந்த அதிகாரி கேர்ரிக்கின் அதிர்ச்சிகர அணுகுமுறையானது பெருநகர போலீசாருக்கு நன்கு தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர்.
பெண்களுக்கு அவர்கள் அளித்த வெற்று வாக்குறுதிகளை விட அதிகம் செயலாற்ற தவறி விட்டனர் என கடுமையாக சாடியுள்ளனர்.
கேர்ரிக், தனது 18 ஆண்டு கால காவல் பணி சேவையில், 24 பாலியல் பலாத்காரம் உள்பட 49 பாலியல் குற்றங்களில் தொடர்புடையவராக உள்ளார். அவர் இதனை விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.