ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆண்டுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள் தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம்.
இது தவிர சர்ப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.