ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான். உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடி வருகிறார். இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் லீக்கில் மும்பை கேப்டவுன் அணிய்யின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் மும்பை கேப்டவுன் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் ரசித் கான் 4 ஓவர் பந்து வீசி 16 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய ரஷித் அதில் பார்டுனின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.