நேபாளத்தில், ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், லம்ஜங் மாவட்டத்தில், நேற்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால், துாங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் வீதிக்கு ஓடி வந்தனர். ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, காலை 10 மணி வரை, 20 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். பீதியில் வீட்டை விட்டு ஓடிய மூன்று பேர் பள்ளத்தில் விழுந்ததில் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. லம்ஜங் பகுதியில், மண் குடிசை ஒன்று தரையில் புதைந்தது. அதில் பாதி சிக்கிய நிலையில் இருந்த பெண் ஒருவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். நேபாளத்தில், 2015ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில், 9,000க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.