சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:- கடந்த ஆண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை பயன்படுத்தி 39.54,733 பயணிகள் பயணித்துள்ளார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.