மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கும் இடத்தில் துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை காசியானடெப் எனும் இடத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் பல்வேறு நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற இறந்தவர்கள் உடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 12,391 பேரும் சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு 2 கோடியே 30 லட்சம் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து துருக்கி, சிரியாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் மருந்து, உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தை முன்னே கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றில் பேசும் ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் துருக்கி – சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஏற்படும் நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்தியா வழியாகச் சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும்” என தெரிவித்துள்ளார்.