கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா 2ம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
நாளை காலை மருத்துவ துறையினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், தற்போது தலைமைச் செயலாளர் மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.