ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை அவர் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்.
இதற்கு பதிலாக, மத்திய மந்திரி ஜெய்சங்கர் பெயர் எழுதிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஒன்றை வாங் பரிசாக வழங்கினார்.
இந்த பயணத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்படுவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளங்களுக்கான திறந்த நிலையிலான மற்றும் வெளிப்படை தன்மையுடன் கூடிய ஆழ்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் இருவரும் ஒன்றாக பங்காற்றுவது எப்படி? என்பது பற்றி இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின்போது, மந்திரிகள் மற்றும் உயர்மட்ட அரசு பிரதிநிதிகள், அவற்றுடன் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர்புடைய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.