தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்து காணாமல் போன தமிழைத்தேடி என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை நோக்கி பரப்புரை பயணத்தை தொடங்கினார்.
பரப்புரை பயணம் செல்லும் வழியில் மறைமலைநகரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, செங்கல்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கி.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழைத்தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் எனக்கு நீங்கள் வாழ்த்து சொல்லுங்கள், உங்கள் வாழ்த்துகளோடு நான் மதுரை நோக்கி செல்கிறேன்.
இன்று முதல் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் தமிழில் உரையாடுங்கள். இப்போது அம்மா என்ற வார்த்தை யாரும் சொல்வது கிடையாது. மம்மி என்று சொல்கின்றனர். அம்மா என்று பசுக்கள் சொல்கிறது ஆனால் உங்கள் வீட்டில் இருந்து அம்மா என்று யாரும் கூறுவதில்லை அம்மா என்ற வார்த்தையை மறந்து விட்டார்கள்.
நான் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் விளம்பர பலகையில் தமிழ் எழுத்து இல்லை, நாம் லண்டனில் வாழ்கிறோமா என்று கோபம் வருகிறது. பிறந்த நாளன்று மரக்கன்று நட்டால் நான் உங்களை வாழ்த்துவேன்.