உக்ரைன் மீதான ரஷியா போர் நாளை ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.
மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றதும், அங்கு ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததும் போரை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.
போரை தொடங்கியது அவர்கள்தான் இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நேற்று முன்தினம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சுமார் 2 மணி உரையில் பெரும்பாலும் உக்ரைன் போர் குறித்து அவர் பேசினார்.
அப்போது அவர், “போரை தொடங்கியது அவர்கள்தான். போரை நிறுத்துவதற்காகவே நாங்கள் பலத்தை பயன்படுத்துகிறோம்.
அமைதியான முறையில் விட்டுக் கொடுத்துச் செல்வதற்கே முயன்றோம். ஆனால், நமது முதுகில் குத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்” என கூறினார்.