Home இலங்கை இலங்கை அரசின் திட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை அரசின் திட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

by Jey

இந்திய மீனவர்களை வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (26.02.2023) ஒன்றுகூடிப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சின் முடிவிலேயே ஜனாதிபதியை சந்திப்பதற்கான கடிதம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில்,

“கடந்த பல வருடங்களாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகத் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பாக வடக்கு கடற்றொழில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

நல்லாட்சிக்காலத்தில் நீங்கள் (ரணில் விக்ரமசிங்க) பிரதமராகப் பதவி வகித்தபோது, 2016ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சு மட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட பேச்சில் எட்டப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன்கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதி வழங்குவது தொடர்பாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.

இது வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபா சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளன.

எமது கடல் பகுதிக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாகத் தங்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக உள்ளோம். இலங்கையின் இறைமைக்குட்பட்ட கடற்பகுதியில் வெளிநாட்டு கடற்றொழிலாளர்களை அனுமதிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

related posts