இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை (மார்ச் 1) தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டியில் கே.எல்.ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கே.எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால், அவரிடமிருந்து டெஸ்ட் துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் 3-வது டெஸ்டில் சுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் ஆகிய இருவரில் யார் இந்திய அணியில் இடம்பெறுவார் என்கிற கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்ததாவது: கடினமான தருணத்தை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அவர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.துணை கேப்டனாக இல்லாமல் போனாலும் ஒன்றுமில்லை.
இதற்கு முன்பு கே.எல். ராகுல் துணை கேப்டனாக இருந்தார். துணை கேப்டன் பதவியைப் பறித்தது எவ்வித செய்தியையும் குறிக்கவில்லை . டாஸ் நிகழ்வின்போது அணியில் இடம்பெறும் 11 பேரின் பெயர்களையும் கூற விரும்புகிறேன்.
ஏனெனில் சிலசமயம் கடைசி நேரத்தில் காயங்கள் ஏற்படலாம். எங்கள் அணியில் மேல்வரிசை பேட்டர்களிடமிருந்து நிறைய ரன்கள் வரவில்லை. அடுத்த ஒரு சில ஆட்டங்களில் அவர்கள் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்கலாம். ஷுப்மன் கில்லா கே.எல். ராகுலா எனக் கேட்கிறீர்கள். ஷுப்மன் கில் மட்டுமல்ல இந்திய அணியில் இடம்பெற 17-18 பேரும் போட்டியிடுகிறார்கள் என்றார்.